கொலைகாரன் விமல் வீரவன்ச உடனடியாக கைது செய்யுங்கள் - அநுர அரசுக்கு அழுத்தம்
கொலைகாரன் விமல் வீரவன்சவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவை (Wimal Weerawansa) கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் போராடியதற்கு காரணம்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழியிலே குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பெண்களின் ஆடைகளுடன் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் சர்வதேச நீதி வேண்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் புற்றுக்குள் இருந்து கொண்டு பாம்பு வந்தது போல ஜேவிபி கட்சியின் முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச கோஷமிடுகின்றனர். 1988, 1989 களில் எந்த காரணமும் இல்லாமல் ஜேவிபினர் போராடினார்கள். தமிழ் மக்கள் போராடியதற்கு காரணம் இருக்கிறது.
ஜேவிபி போராடியதற்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும். எத்தனை கொலைகளை செய்தீர்கள்? விமல் வீரவன்ச இங்குள்ள புதைகுழிகளில் இருந்து வரும் எலும்புக்கூடுகள் தொடர்பாக இன்று பல கதைகளை கூறுகிறார்.
எல்லாவற்றையும் மூடி மறைத்து தாங்கள் கொலைகளை செய்து முடித்துவிட்டு தேவையில்லாமல் பல விடயங்களை விமல் வீரவன்ச கதைக்கிறார்.
வேலைக்காரியை கொலை செய்தவர்
விமல் வீரவன்ச தனது சொந்த வீட்டிலேயே வேலைக்காரியை கொலை செய்தவர். கொலைகாரன் விமல் வீரவன்சவை கைது செய்து அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை யாழ்ப்பாணத்தில் இருந்து நான் வலியுறுத்துகிறேன்.
அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீங்கள் அரசாங்கம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. இந்த நேரத்தில் செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக விமல் வீரவன்ச அறிக்கை விட என்ன காரணம்? ஜேவிபியுடன் சுற்றிவிட்டு பின்னர் ராஜபக்ஷ பக்கம் பாய்ந்து சென்றார்.
அடுத்தவர்களை பயமுறுத்தி தன்னை விளம்பரப்படுத்தி தனது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிக் கொண்டு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு திரிகின்றார்.
கடந்த காலங்களில் அவர் செய்த ஒரே ஒரு கொலை மட்டுமே வெளியில் வந்தது. ஆனால் இன்னும் எத்தனை நடந்தது என்று தெரியாது. இந்த தருணத்தில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

