பெண் சட்டத்தரணி மர்மமான முறையில் உயிரிழப்பு - தீவிர விசாரணையில் காவல்துறை
பெல்மடுல்ல புலத்வெல்கொட வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பெல்மடுல்ல காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
40 வயதான துஷ்மந்தி அபேரத்ன என்வரின் சடலம் அவரது படுக்கையில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரணத்தில் சந்தேகம்
காலையில் வீட்டிற்கு வந்த பணிப்பெண் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கடந்த 30ம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பெல்மடுல்ல காவல்துறைக்குஅறிவித்துள்ளனர்.
மேலும் இந்த வீட்டுக்கு வந்து காலை முதல் மதியம் வரை வேலை பார்க்கும் பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பெல்மடுல்ல நீதவான் சட்டத்தரணியின் வீட்டிற்குச் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
சட்டத்தரணியின் குறுஞ்செய்தி - காவல்துறை விசாரணை
உள்ளூர் பெண் ஒருவரும் நீதவான் முன் வாக்குமூலம் அளித்தார். மேலும் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஏராளமான பொருட்கள் சிதறிக் கிடப்பதாக பணிப்பெண் காவல்துறையிடம் கூறியுள்ளார். உயிரிழந்த சட்டத்தரணி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
