மலையகத்தில் கம்பனி முறைமைகள் இல்லாமலாக்கப்படும் : அதிபர் உறுதி!
மலையகத்தில் கம்பனி நடைமுறைகள் இல்லாமல் செய்யப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற 'நாம்200' ஆண்டு விழா கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இதன்போதே அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
விசேட குழு
“மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது.
இதனை செயற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது.
மலையக மக்களுக்கு பத்து பேர்ச் காணி உறுதியுடன் வழங்கப்படும். அத்துடன் கல்வித்துறையில் அனைவருக்கும் சமத்துவ வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.” என்றார்.
இதேவேளை, அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இணைந்து கொட்டக்கலை மவுண்ட் வெர்னன் தோட்ட கீழ் திம்பில வலயத்தில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு ஒன்லைன் ஊடாக அடிக்கல் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.