நல்லூர் கந்தசுவாமியாரின் வருடாந்த திருவிழாவின் விசேட தினங்கள்
வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமியாரின் வருடாந்த பெருந்திருவிழா வரும் ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையிலே அதிக பக்தர்கள் கூடும் வணக்கஸ்தலங்களில் பிரதானமான இவ் ஆலயத்தில் வருட வருடம் 25 திருவிழாக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த திருவிழாக்களின் விசேட தினங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில், இவ்வாலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைகள்
அதன்படி, ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.
ஆலய வெளிவீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட்செல்ல முடியாது.
அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
அத்துடன் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாததுடன் காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்கவும் முடியாது.
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.
அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)