சிஐடிக்கு செக் வைக்கப்போகும் நாமல் : விசாரணைக்கு தயார் என அறிவிப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்வதற்குத் முழுமையாகத் தயாராக இருப்பதுடன், அங்கு சென்று சிஐடி அதிகாரிகளிடமே பல கேள்விகளை எழுப்பக் காத்திருப்பதாகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நேற்று (28) நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், என்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுக்கும் வரை நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.
பிள்ளையானிடம் வாக்குமூலம்
அவ்வாறு அழைக்கப்பட்டால் அங்குள்ள அதிகாரிகளிடம் நாட்டின் முக்கியச் சர்ச்சைகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைக்கப் போகின்றேன்.

முதலாவதாக, 'பிள்ளையான்' என்பவரிடம் வாக்குமூலம் பெறச் சென்ற அதிகாரி, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபரைச் சந்தித்திருந்தும் அவரை ஏன் உடனடியாகக் கைது செய்யவில்லை.
ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டும் அந்த நபர் ஏன் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இரண்டாவதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கைகள் முன்கூட்டியே வந்தபோது, அந்தப் பாரிய கோப்புகளை ஏன் சிஐடி மறைத்து வைத்திருந்தது? ஏன் அவை ஜனாதிபதியிடமோ அல்லது தேசியப் பாதுகாப்புச் சபையிடமோ சமர்ப்பிக்கப்படவில்லை?

அதேபோன்று, ஜே.வி.பியின் பொதுச்செயலாளர், இப்ராஹிம் என்பவரைத் தங்களின் நாடாளுமன்ற தேசியப் பட்டியலுக்குப் பெயரிடும் போது, அவரது பிள்ளைகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது ஜேவிபி தலைமைக்குத் தெரியுமா?
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பதற்காவது சிஐடி தனக்கு உடனடியாக அழைப்பு விடுத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |