மகிந்தவிற்கு பிரதமர் பதவி - மறுக்கும் நாமல் ராஜபக்ச!
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது புதல்வருமான நாமல் ராஜபக்ச தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பதவியில் இருந்து விடை கொடுத்த போது மக்களுடன் இருந்த மகிந்த, மக்களின் ஆணையின் அடிப்படையில் மட்டுமே மீண்டும் பதவிக்கு வருவார் என நாமல் கூறியுள்ளார்.
கொழும்பில் பலத்த பாதுகாப்பு
தொடர்ந்து அவர்,
"மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்கவுள்ளார், இதனால் போராட்டங்கள் ஏற்படும் என்ற அடிப்படையில் கொழும்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது எனும் தகவல் அர்த்தமற்றது.
வீழ்ச்சியடைந்த நாடு மீண்டும் மீள்வதற்கு ஆரம்பித்துள்ள தருணத்தில், மீண்டும் போராட்டங்களை நடத்துவது தேவையற்ற விடயம்.
கொழும்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும்.
இதேவேளை, சுற்றுலாத் துறைக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிபரிடம் கோரிக்கை
போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால் ராஜபக்சர்களும், ரணிலும் விழப் போவதில்லை, மாறாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிதான் வீழ்ச்சியடையும்.
அதேசமயம், நாடாளுமன்றை தீயிட்டு கொளுத்த முயற்சித்தவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் கோரிக்கை முன்வைக்கிறேன்." இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
