தேசிய பட்டியல் விவகாரம்: பதிலடி கொடுத்த ரவி
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தனது நியமனம் சட்டபூர்வமானது என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் (21.11.2024) இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல்
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசியப் பட்டியல் உறுப்பினராக தான் தெரிவுசெய்யப்பட்டமை ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை. முழு கட்சிக்கும் பிரச்சினை இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்துவதில் தனது கவனத்தை செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியதுடன், ஒரு சிலரின் நலனுக்காக கட்சி பாதிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு
2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது.
அவர்களில் ஒருவராக கட்சியின் செயலாளரால் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அதனை உறுதிப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |