பேரினவாதத்தின் பசிக்கு இரையாகும் தமிழர் தேசம் - கைகட்டி மௌனிகளாக தமிழரின் ஏக பிரதிநிதிகள்!
சிங்கள மக்கள் வாழாத தமிழர் தாயகத்தில் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் பௌத்தமயமாக்கல் தீவரமடைந்து வருகின்றது. அதுமட்டுமன்றி தமிழரின் வழிபாட்டிமான இந்து ஆலயங்கள் மீதும் தொல்பொருள் திணைக்களம் கைவரிசை காட்டி வருகின்றது.
அதேநேரம் இன்னுமொரு தரப்பு தமிழரின் இருப்பையே இல்லாது செய்யும் நோக்கோடு நில ஆக்கிரமிப்பில் மும்முரமாக களமிறங்கி கச்சிதமாக செயலாற்றி வருகின்றது.
இவ்வாறாக தமிழர் தாயகத்தில் பல அக்கிரமங்களும் அடாவடிகளும் அரங்கேறி வரும் வேளை, தமிழரின் ஏக பிரதிநிதிகள் நாங்களே என மார் தட்டித் திரியும் தலைமைகள் மௌனம் காப்பது பெரும் கவலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர் பகுதியில் பிரமாண்ட பௌத்த வழிபாடு
இதனை தொடர விடுவது ஆபத்தானது என சமூக ஆர்வலர்களும் தமிழ் மக்களும் கடும் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமன்றி, சிங்கள மக்கள் வாழாத நாவற்குழியில் விகாரை அமைத்து, அதற்கு விசேட வழிபாடு செய்வதற்காக தென்னிலங்கையில் இருந்து 128 பொளத்த பிக்குகள் சவேந்திர சில்வா தலைமையில் படையெடுத்து வந்து மேள தாளங்களுடன் வழிபாடு பிரமாண்டமாக அரங்கேறியுள்ளது.
அதுமட்டுமன்றி ஈழத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளில் போர்க்குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் யாழ் வருவதை எதிர்த்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் முன்னெடுத்திருந்த போதும் போராட்டக்கார்களையும் பொருட்படுத்தாது, போராட்டத்தை ஊடறுத்தே பிக்குகளுக்கும் சவேந்திர சில்வாவிற்கும் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வாறு தமிழர்களை துச்சமென நினைத்து கடந்து செல்லும் சிங்கள தேசத்தின் அத்துமீறல்களை ஒன்றிணைந்து தட்டிக் கேட்கும் அளவிற்கு திராணி அற்றுள்ளனரா எமது தமிழ்த் தலைமைகள் எனவும், மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கோயில்கள் நிலங்களில் அத்துமீறல்
அதேவேளை வெடுக்குநாரி மலை, குருந்தூர்மலை, உருத்திரபுரம் சிவன் கோயில், நிலாவரை கிணறு போன்ற இடங்கள் தமிழர் என்ற அடையாளம் அழிக்கப்பட்டு பௌத்த சிங்கள மயமாக்கலுக்குள் இரையாகும் துயரம் ஏற்பட்டுள்ளது.
மற்றும் நெடுந்தீவு பகுதியிலுள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெடியரசன் கோட்டை தற்போது, புராதன பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அடையாளப்படுத்தி, அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சில வாரங்களுக்குள் தமிழர் தேசத்தை சிங்கள தேசம் இரையாக்கும் பல அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. இது வரை ஏன் ஒரு தமிழ்த் தலைமை கூட அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
திரிபுபடுத்தப்படும் தமிழர் மரபுரிமை
மேலும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமான வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் மக்களின் கலாசார மரபுரிமைகளை அழித்தும் அவற்றை திரிபுபடுத்தியும் பௌத்த மயமாக்கல் என்னும் வேலைத்திட்டம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
ஆனால், இவற்றுக்கு எதிராக தமிழர் தரப்பு தொடர்ந்தும் மௌனம் காத்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்த விவகாரங்கள் தொடர்பில், தமிழர்களின் தலைமைகள் என கூறிக்கொள்வோர் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறார்கள். எனவே உடனடியாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ் தலைமைகள் முன்வரவேண்டுமெனவும் தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தென்னிலங்கையின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செய்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வரவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழர் தொன்மையை பாது காப்பது அவசியம்
தமிழர் தேசத்தில் நடைபெறும் சம்பவங்கள் இன அழிப்புடன் பின்னிப்பிணைந்த செயற்பாடுகளாகும். தனியான மொழி, கலாசார பண்பாடுகளை கொண்ட தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றை அழிப்பதனூடாக அவர்களின் தனித்துவம், அடையாளத்தை அழித்து நாடு முழுவதையும் சிங்கள தேசமாக மாற்றும் ஒரு ஏற்பாடே தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
இதனை தமிழர் தேசம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை முழுமையாக தடுத்து நிறுத்தி தமிழர் தாயகத்தையும் தமிழ் மக்களின் தொன்மையையும் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
அதற்கான வேலைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொள்ளவேண்டுமெனவும் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் நாமே என சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளிலும், ஐ.நா போன்ற சர்வதேச அரங்குகளிலும் மட்டுமே கூறிக்கொண்டிருக்காது தமிழ்த் தலைமைகள் தங்களுக்குள் ஒரு ஒற்றுமையுணர்வுடன் தமிழருக்கான பிரதிநிதிகள் என்ற ஒரே கொள்கையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)