மாவோசிஸ்ற் இயக்கத்திற்கு இந்திய இராணுவம் வழங்கிய பேரிடி!
இந்தியாவில் மாவோவாத கிளர்ச்சி அமைப்பின் தலைவரான பசவராஜ் இன்று தனது 70 வது வயதில் இந்தியப்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவோசிஸ்ற் எனப்படும் மாவோவாத இயக்கத்தின் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த கிளர்ச்சிப்பாதையில் அதன் தலைவர் பசவராஜின் மரணம் அந்த அமைப்புக்கு கிட்டிய பெரும் அடியாக மாறியுள்ளது.
இன்று, சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த ராணுவ நடவடிக்கையில் கொல்லபட்ட 27 மாவோவாதிகளில் நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜ்சும் ஒருவர் என உள்துறைஅமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கை
மாவோவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் மூன்று தசாப்த காலப் போராட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஒரு தலைவர் கொல்லப்பட்டது இதுவே முதன் முறையெனக் குறிப்பிட்ட அமித் ஷா, 2026 மார்ச் மாததுக்கு முன்பு இந்தியாவில் இருந்து மாவோவாதிகளை ஒழிக்க அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் சுட்டிக்காகாட்டியுள்ளார்.
இந்தியாவில் வறுமை சமூக சமத்துவமின்மை மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாக கூறும் மாவோ கிளர்ச்சியாளர்களிடமிருந்து மலைப்பகுதிகளை மீட்பதை நோக்கமாகக் கொண்ட மூன்று வார கால இராணுவ நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சன்மானத்தொகை
70 வயதான பசவராஜ் இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவராக இருப்பதால் அவரது தலைக்கு ஒன்றரைக்கோடி ருபாய் சன்மானத்தொகையை இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த பசவராஜ் ,பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் 1970-களில் மாவோவாத இயக்கத்தில் இணைந்தது, கங்கண்ணா, கிருஷ்ணா, நரசிம்மா, பிரகாஷ் உள்ளிட்ட பல புனை பெயர்களில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
