ரணிலுடனான இனப்பிரச்சினை பேச்சு மேசை - விக்கி வெளியிட்ட தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் நிபந்தனை இன்றி பங்கேற்றால், அது கடந்த காலங்களைப் போன்று அர்த்தமற்றதாகவே இருக்கும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நிபந்தனையாக முன்வைத்தே இனப் பிரச்சினை தீர்வு பேச்சுக்கு செல்ல வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைப்பதற்கு முன்பதாகவே இது தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு தாம் கடிதமொன்றை அனுப்பியதாக ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் கூட்டணியின் தலைவரும், முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வுக்கு முந்திய நிபந்தனை
எனினும் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது எனவும், முதலில் பேச்சு மேசைக்கு வாருங்கள் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சர்வகட்சி கூட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், தமிழ் தேசியக் கட்சிகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
பேச்சு மூலமே சிறந்த தீர்வு
எனினும் பேச்சுவார்த்தை மேசையில் கலந்துரையாடி, தீர்வு தொடர்பில் முடிவு எடுப்போம் எனவும் என்ன பிரச்சினை என்றாலும் பேச்சு மூலமே சிறந்த தீர்வு கிடைக்கும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிடைக்கும் சிறந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் கடந்த காலத் தவறுகளை மீண்டும் இழைக்காதீர்கள் எனவும் ஊடகமொன்றுக்கு வழங்கிய மின்னஞ்சல் ஊடான பதிலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
