கே.வி. தவராசா தலைமையில் புதிய கூட்டணி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த அக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா (K.v. Thavarasha) தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் போது, ஜனநாயகத் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தச் சுயேட்சைக் குழு தேர்தலில் களமிறங்கவுள்ளது என்றும் அறியப்படுகிறது.
அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழு வவுனியாவில் கூடி வேட்பாளர்களைத் தெரிவு செய்தது.
உறுப்பினர்கள்
குறித்த வேட்பாளர்கள் தெரிவில் கட்சியின் உறுப்பினர்கள் பலருகுக்கும் அதிருப்தி ஏற்பட்டதுடன், குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்ட தெரிவில் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தெரிவால் அதிருப்தியடைந்தவர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சுயேச்சைச் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி, ஐ.நாகரஞ்சினி, முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் உள்ளடங்குவர்.
வேட்புமனு தாக்கல்
இதேவேளை, இந்தச் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுவதற்குத் தென்மராட்சியின் க.அருந்தவபாலனைத் தமிழரசுக் கட்சியின் அதிருப்திக் குழுவினர் அணுகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, இந்தச் சுயேச்சைக் குழு நாளை (11) வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |