அம்பலமாகப்போகும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் ஊழல் மோசடிகள்!
சிறிலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தலைமையிலான சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழு, 2010 - 2025 வரை நடந்ததாகக் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த பரிந்துரைகளுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் பணியை மேற்கொள்கிறது.
இந்த நோக்கத்திற்காக சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழுவை நியமிக்கும் முன்மொழிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்தார்.
வருடாந்திர இழப்பு
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் பங்களித்தாலும், அதன் பராமரிப்புக்காக அரசாங்கம் அதிக செலவை ஏற்க வேண்டும் என்றும், நிறுவனத்திற்கு ஏற்படும் வருடாந்திர இழப்பு நாட்டின் பொருளாதாரத்திற்கு தாங்க முடியாததாக உள்ளது என்றும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, பொருளாதார ரீதியாக அனுகூலங்களுடனும், வினைத்திறனாகவும், பயனுறுவாய்ந்த அரச நிறுவனமாக மாற்றியமைத்து, நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக மேற்கொண்டு நடாத்திச் செல்வதே பொதுமக்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசாரிக்க வேண்டியதன் அவசியம்
இந்த நோக்கத்தை அடைவதற்கு, தற்போதைய நிலைமைக்கு இலங்கை விமானப் போக்குவரத்து நிறுவனத்தை இட்டுச் சென்ற காரணங்களைக் கண்டறிய பரிவர்த்தனைகள் மற்றும் சம்பவங்கள் குறித்த முழுமையான முறையான ஆய்வு மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
விமான நிலைய கண்காணிப்புக்கு பொறுப்பான விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் செயல்பாடுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நோக்கங்களுக்காக ஒரு சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழுவை நியமிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
