ரேடாரில் பதிவான தேசிய தலைவரின் குரல்: புது கதை புனையும் சரத் வீரசேகர
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தம் நிறைவடையும் இறுதி நேரம் வரை பேசிய விடயங்கள் எமது ரேடாரில் பதிவாகியிருந்தது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 ஆம் அண்டு வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ( Mahinda Rajapaksa) கோரினார்கள்.
சர்வதேச நாடுகள்
எனினும், மகிந்த ராஜபக்ச அதனை மறுத்தார் இதனால் வெளிநாடுகள் வெட்கமடைந்தன.
2009 இல் யுத்தம் நிறைவடைய இரண்டு மணி நேரம் இருக்கும் வரைக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நம்பிக்கையோடு இருந்தார்.
சர்வதேச நாடுகள் தம்மைக் காப்பாற்றும் என எதிர்பார்த்திருந்தார், அந்த இரண்டு மணி நேரங்களும் பிரபாகரன் சர்வதேச நாடுகளின் உதவி கேட்டுக் கொண்டிருந்தார், அது எமது ரேடாரில் பதிவாகியுள்ளது.
கோரிய உதவி
தம்மைக் காப்பாற்றுமாறு அவர் சர்வதேசத்திடம் கோரிய உதவி, அவர் இறப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக எமது ரேடாரில் பதிவானது.
பிரபாகரனுக்கு கை கொடுக்க முடியாமல் போனதால் சர்வதேச சமூகம் தனது வெட்கத்தை மூடி மறைத்துக் கொள்ள யுத்தக் குற்றத்தை எம்மீது சுமத்தியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு சாட்சியாய் தற்போது செம்மணி மனித புதைகுழி உருவெடுத்துள்ள நிலையில், தேசியவாதம் பேசும் தென்னிலங்கை அரசியல்வாதிகள், குறிப்பாக விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டோர் ஊடகங்களின் முன்னால் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
