மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்
புதிய இணைப்பு
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் தெரியவருவதாவது, மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர்.
மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இன்று திங்கட் கிழமை காலை (01.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை மாண்புமிகு ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் முதலாம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் திறந்து வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) இதனை தெரிவித்துள்ளார்.
வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு குடியகல்வு அலுவலகம் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கை
இதேவேளை ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து யாழ் .மாவட்ட செயலகத்தில் கடவுசீட்டு , அலுவலகத்தை திறந்து வைத்து, கடவுசீட்டு வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
பின்னர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார்.
அத்துடன் யாழ் . பொது நூலகத்திற்கு விஜயம் செய்து , நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன் , சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
