அரசியலில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! இளைஞர்களுக்காக உதயமாகும் புதிய கட்சி
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த புதிய அரசியல் கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய அரசியல் கட்சியில் இணை ஏற்கனவே சுமார் 10 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
புதிய கட்சியில் இணைய இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் அரசியல்வாதிகள்
இவ்வாறான நிலைமையில், ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைவது சம்பந்தமாக பல கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன .
இதற்கு சில சிவில் அமைப்புகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
அரசியல் மாற்றத்தை கோரும் இளைஞர்கள்
இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர், யுவதிகள் தற்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரம்பரிய அரசியலில் இருந்து விடுப்பட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி, வன்முறைகளை தூண்டி, நாட்டையும் மக்களையும் பொருளாதார ரீதியாக சுரண்டி கொள்ளையிட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
