சந்தனத் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அதிபர் மாளிகை..!
முப்பது கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட தேசிய 'சந்தனத் தோட்டம்' உள்ள இடத்தில் புதிய அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகத்தை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் கீழ் கோட்டையிலுள்ள அதிபர் மாளிகையை மற்றுமொரு அபிவிருத்தி திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அதிபர் மாளிகை மற்றும் அதிபர் செயலகத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் ஒன்பது ஏக்கரில் தயார் செய்யப்பட்டுள்ள தேசிய சந்தனத் தோட்டம் அதற்கு ஏற்றது எனவும் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளார்.
எதிர்கால திட்டம்
இதன்படி எதிர்கால திட்டங்களை தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.
தேசிய சந்தனத் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மற்றுமொரு காணியில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பன அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அலுவலகத்தை அருகிலுள்ள வேறொரு காணியில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அதிபர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.
இந்த நிர்மாணத்திற்கு தேவையான இடத்தினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிபர், அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவித்துள்ளார்.
