ரஷ்ய அதிபர் புடினின் அதிரடி அறிவிப்பு - மேற்குலகுக்கு கசப்புச் செய்தி
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஒரு வருட நிறைவு வரும் பின்னணியில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வழங்கிய உரையில் அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை ரஷ்யா இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஒன்றே அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு அணு ஆயுத ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் ரஷ்யா இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்
ஸ்ராட் (START) எனப்படும் இந்த அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை ரஷ்யா இடைநிறுத்துவதாக அதன் அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவித்தமை மேற்குலகுக்குரிய புதிய கசப்புச் செய்தியாக வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்தில் உரை நிகழ்த்தியபோது ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையிலான போராட்டமாக உக்ரைன் மீதான ரஷ்ய போரை சித்தரித்த சமகாலத்தில் ஸ்ராட் அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை ரஷ்யா இடைநிறுத்துவதாக புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து முற்றாக விலகாதபோதிலும் அதன் பங்கேற்பை இடைநிறுத்துவதாக புடின் தனது தேசத்துக்கான உரையில் கூறினார்.
இந்த அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் தான் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றையொன்று ஆயுத தளங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் அம்சம் உள்ள நிலையில் தற்போது ரஷ்யா இதனை இடைநிறுத்துகின்றது.
மொஸ்கோவிற்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் இறுதியாக 2021 ஆண்டில் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புடினின் இந்த முடிவு வந்துள்ளது.
புடினின் முடிவு
தற்போதைய நிலையில் உலகின் இரண்டு பெரிய அணு ஆயுத நாடுகளான அமெரிக்காவையும் ரஷ்யாவையும் ஒழுங்குபடுத்தும் ஒரே ஒப்பந்தம் இந்த ஸ்ராட் ஒப்பந்தம் மட்டுமே.
இதனால் ரஷ்யா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உடனடியாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.
