சிறிலங்கா ஆரம்பித்த புதியதோர் அத்தியாயம்
நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக்குழுவொன்றை சிறிலங்காவில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நேற்று(14) கொழும்பில் சிறிலங்காவிற்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து கருத்துத்தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நாட்களில் மடாரிகி அல்லது மாஓரி நியூசிலாந்து புதுவருடக் கொண்டாட்டம் இடம்பெறுவது ஒரு சுப செய்தியாகும் என்றும், ஆரம்பமாக பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காண்மையை முன்கொண்டு செல்வதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே அனைத்து துறைகள் ஊடாகவும் பலமான உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கு இந்த நடவடிக்கை உதவும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக நாடுகள்
சிறிலங்காவும் நியூசிலாந்தும் ஆசிய பசுபிக் வலயத்தில் பழமைவாய்ந்த நாடாளுமன்ற ஜனநாயக நாடுகள் என்பதுடன், 1931ஆம் ஆண்டு முதல் இரண்டு நாடுகளுக்கும் சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்றமையை சுட்டிக்காட்டிய பிரதமர், 1951ஆம் ஆண்டு மகரகம பல் வைத்தியக் கல்லூரி மற்றும் 1956ஆம் ஆண்டு தேசிய பால்சபை என்பவற்றை தாபிப்பதற்கு உதவியமைக்காக நியூசிலாந்துக்கு நன்றி தெரிவித்தார்.
தற்போது வாய்ச் சுகாதார நிறுவனம் என்று அழைக்கப்படும் மகரகம பல்வைத்திய கல்லூரி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பற்சுகாதார ஊழியர்களைப் பயிற்றுவித்துள்ளதுடன், 443 பாடசாலைகளில் பற் சுகாதார சேவைகளை முன்னெடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த நிறுவனத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக நவீன நிபுணத்துவம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்து கொழும்பு திட்டத்தின் கீழ் பரிசீலிக்குமாறு நியூசிலாந்திடம் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டன் வதிவிட தூதுவராலய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
மடாரிகி விடுமுறை
“எமது மடாரிகி விடுமுறை தினம் ஐக்கியம், புதுப்பித்தல், கொண்டாட்டம், எதிர்பார்ப்பு மற்றும் புதிய ஆரம்பம் என்பவற்றை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. அது நியூசிலாந்து வாசிகளுக்கு ஒரு சிறிய ஓய்வாகவும் எதிர்காலத்தை நல்லெண்ணத்துடன் நோக்குவதற்கும் சந்தர்ப்பமளிக்கின்றது.
மடாரிகியின் அடிப்படையில் நான் உண்மையில் சிறிலங்கா-நியூசிலாந்து உறவு, ஐக்கியம், எதிர்பார்ப்பு மேம்படுவதன் ஊடாக புதியதோர் ஆரம்பம் ஏற்படவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.“
நியூசிலாந்து நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் சிறிலங்காவிற்கு உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்கு முன்வந்ததாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் எபல்டன், கடந்த வருடம் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் போசாக்குக் குறைந்த பிள்ளைகள் மற்றும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு நாம் மனிதாபிமான உதவிகளை வழங்கினோம் என்று அவர் தெரிவித்தார்.
நியூசிலாந்து- சிறிலங்கா உறவுகள்
அண்மையில் எமக்கு விசேட நிபுணத்துவம் உள்ள துறைகளில், அரச நிதி முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பல்வகைமை போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் கொள்கை சார்ந்த துறைகளில் விசேட தொழிநுட்ப உதவிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவும் சிறிலங்காவில் உள்ளவர்களும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தம்மை தகவமைத்துக்கொள்ள முயற்சித்ததைப் போன்று நியூசிலாந்தும் இந்த நிலைமையை நாட்டுக்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்துவதற்கு முயற்சித்தாக எபல்டன் தெரிவித்தார்.
''சிறிலங்கா தனது வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதுடன், நியூசிலாந்து சிறிலங்கா உறவுகள் பல்வேறு திசைகளில் முன்னோக்கிப் பயணிக்கிறது. எதிர்வரும் வருடங்களில் நெருக்கடிக்குப் பதிலாக சிறிலங்கா முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கும் போது, நியூசிலாந்து கொழும்பிற்கு வருகைதந்து நிலையான நட்புறவுப் பங்காளியாக வர்த்தக ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஒத்துழைப்புடன் செயற்படவும் கல்வி, சுற்றுலா, விளையாட்டு, பாதுகாப்பு வெளிநாட்டுக் கொள்கை ஊடாகவும் மற்றும் எமது புலம்பெயர்ந்தவர்கள் ஊடாகவும் புதிய முறைமைகள் கண்டறியப்படும்'' என்று உயர் ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
நியூசிலாந்து ஆதிவாசிகளின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் மாஓரி கபஹகா குழுவான கடி கொரஹா குழுவினால் ஒரு இசை நிகழ்ச்சியும் இதன் போது நடத்தப்பட்டது.
வெளிநாட்டுத் தூதுவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.