அமெரிக்க வான்வெளியில் மீண்டும் பரபரப்பு - அடுத்ததாக சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்
அமெரிக்க வான்வெளியில் அதிக உயரத்தில் பறந்த குட்டி கார் அளவிலான பொருளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மர்ம பொருளின் பிறப்பிடம் தொடர்பில் உறுதியான தகவல் தெரியவரவில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த வாரம் சீன உளவு பலூன் ஒன்றை சுட்டு வீழ்த்திய நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியதாக வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு மாநிலமான அலாஸ்கா மீது குறித்த பொருள் பறந்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடனின் உத்தரவு
கடந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனானது காலநிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்டது எனவும், ஆனால் தடம் மாறி அந்த பலூன் அமெரிக்க வான்பரப்பில் நுழைந்ததாக சீனா விளக்கமளித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது வடமேற்கு மாநிலமான அலாஸ்கா மீது பறந்த பொருளானது 40,000 அடி உயரத்தில் காணப்பட்டதாகவும், பயணிகள் விமானங்களுக்கு அது அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அதிபர் ஜோ பைடனின் உத்தரவுக்கிணங்க சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பொருள் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை எனவும், கடந்த வாரம் அமெரிக்க வான்பரப்பில் காணப்பட்ட சீன பலூனை விடவும் அளவில் சிறியதாக காணப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் நோக்கம் என்ன என்பது குறித்து தங்களுக்கு தகவல் இல்லை எனவும், அதன் மிச்சங்களை மீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.