இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்..!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிபர் குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய நிமல் சிறிபால டி சில்வா இன்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு
ஜப்பானிய நிறுவனமான தைசி (Taisei) நிறுவனத்திடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியுள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
சமூக மற்றும் இணையத்தள ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டில் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், இந்த விவகாரம் தமக்கு உட்பட்ட அமைச்சின் கீழ் வருவதனால் இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென என கோரி நிமல் சிறிபால டி சில்வா அமைச்சு பதிவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.
ரணில் நியமித்த குழு
அதன் பின்னர் ஜூலை 22 ஆம் திகதி முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான குழு அறிக்கை ஜூலை 31ஆம் திகதி அதிபர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றமற்றவர் என குழு உறுப்பினர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிமல் சிறிபால டி சில்வா குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால் இன்று மீண்டும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
