நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை - மண்கவ்வும் எனும் சீலரத்ன தேரர்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது.
சிறுபிள்ளைத்தனம்
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும். எனவே, இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை என்றார்.

நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப் பக்குவமும், முதிர்ச்சியும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய சீலரத்ன தேரர், அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார் என்றும் சாடினார்.
"நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது. நீதி அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல.
மாறாக, சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் பின்னணி
நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின் நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது.

கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின் மகனாக இருந்தும், அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத் தேடித் தருகின்றது." - என்றும் சீலரத்ன தேரர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |