இரவோடு இரவாக கவிழ்ந்தது பாகிஸ்தான் அரசு - இம்ரான் கான் பதவி நீக்கம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்த நாட்டு எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை வெற்றி பெற்றமையை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
342 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 172 வாக்குகள் தேவை என்ற பிரேரணையை 174 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அரச தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்த அரச தலைவரின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது.நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒன்பதாம் திகதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றின் உத்தரவுப்படி நள்ளிரவில் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் கூடியது.
இந்தநிலையில் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டு இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் புதிய பிரதமரை தெரிவு செய்யவுள்ளது.
இதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் நாளைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
அடுத்த பொதுதேர்தல் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் புதிய பிரதமர் அதுவரையில் தமது கடமைகளை தொடர்வார்.