சர்வதேச உதவியின்றி இலங்கைக்கு மீட்சி இல்லை - அடித்துக் கூறும் எஸ்.எம்.மரிக்கார்
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் உதவியின்றி இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை வாழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் காக்கப்படுகிறது என்பதை சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பாரிய பாதிப்பு
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்ரமசிங்க நாட்டில் நடைமுறைப்படுத்திய அடக்கு முறைகளும் அவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களும் சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கையை பாரியளவில் பாதித்துள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்ற போர்வையின் கீழ் மேலும் அதிகமான லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடிகளை நீக்கி மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதோடு இலங்கையில் ஏற்பட்டுள்ள பஞ்ச நிலையை நீக்க சர்வதேச அமைப்புகளின் உதவியை நாட வேண்டும்.
எதிர்காலத்தில் இலங்கையில் மீண்டும் இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்க வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். இலங்கைக்கு டொலர்களை அதிகமாக கொண்டு வரக்கூடிய திட்டங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
லஞ்ச ஊழல் நடவடிக்கைகள்
சர்வதேச அமைப்புக்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்க்குமெனில் முதலில் நாட்டில் நடைபெறும் லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் நிறுத்த வேண்டும். போராட்டங்களை முன்னெடுத்தவர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டுமென ராஜபக்ச குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
அப்போது இலங்கையில் சட்டத்தை மீறுபவர்களையும் திருடுவதையே தொழிலாக கொண்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினரையும் என்ன செய்ய வேண்டும் என்பதனை அனைவரும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்” என்றார்.