வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு தடை? வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் உள்ள போதிலும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என சமுர்த்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe)இன்று (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்(Mohammed Moosam), அண்மைய மாதங்களில் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வர்த்தக நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
வாகனங்களை ஒன்றிணைப்பது தொடர்பாக தற்போது பல முகவர்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வாகன இறக்குமதி மீதான தடை நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் கூறினார்.

