உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணை தேவையில்லை: ஹர்ஷ டி சில்வா
தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha De Silva) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவித்துள்ளார்.
இதன்படி, ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு (Mahinda Yapa Abeywardena) குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் தெரியவருகையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டபோது விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகள் தேவையில்லை
இந்நிலையில், விசாரணையை ஆரம்பித்தமைக்காக பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும், நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் நாடாளுமன்றத்தில் தாம் அவ்வாறு கருத்து தெரிவித்ததாகவும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
மேலும், இனி வரும் காலங்களில் அவர் தொடர்பில் அவ்வாறான விசாரணைகள் தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் மீண்டும் அறிவிப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |