அப்பாவி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு முப்படைகளின் மேலாதிக்கத்தை உயர்த்தும் புதிய சட்ட மூலம்!
நாளைய வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலிற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அரசின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு எதிராக ஒருமித்து ஒற்றுமையாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் எனவும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
பண்ணாகத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஒரு புதிய சட்டமூலம் மக்கள் மத்தியில் எதுவித அபிப்பிராய கோரலும் இடம்பெறாது. மேலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம், 30 வருட காலமாக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் எதேச்சதிகாரம்
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்போது அதிகாரத்தில் இருந்த தமிழ் தலைமைகள் ஆதரித்தமையாலேயே தமிழர்கள் மிக மோசமான நிலையை அனுபவிக்க வேண்டி ஏற்பட்டது.
இன்று சர்வதேசமட்டத்திலும் சரி ஐக்கிய நாடுகள் சபையிலும் சரி இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்ற ஒரு சட்டமே இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்ற நிலையில், மீளவும் சிறிலங்கா அரசாங்கம் எதேச்சதிகாரமான முறையில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்ற போர்வையில் முயற்சிப்பது என்பது சர்வதேசத்தினுடைய பாரிய எதிர்ப்பினையும் சம்பாதிக்கின்ற ஒன்றாக காணப்படுகின்றது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுகின்ற நிலையிலும் முப்படைகளினுடைய மேலாதிக்கம் இச்சட்டத்தின் மூலம் உயர்வடைந்து செல்வதனையும் நாங்கள் காணலாம்.
முப்படைகளின் மேலாதிக்கம்
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு அப்பால் ஊழல் மோசடிகள் குறித்து ஒரு ஒழுங்கான வலுவான சட்டம் வராத நிலையில் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தப்பித்துக் கொள்ளுகின்ற ஒரு நிலையைத்தான் இது தோற்றுவித்திருக்கின்றது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நாங்கள் முற்றாகவே நிராகரித்திருக்கின்றோம். இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டிற்கு உகந்ததல்ல, அதே நேரம் சர்வதேசத்திற்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
உருவக மாற்றங்கள் செய்து எந்த ஒரு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச் சட்ட போர்வையில் கொண்டு வந்தாலும் ஜனநாயக ரீதியாக போராடும் இந்த மக்களை அடக்குகின்ற ஒடுக்குகின்ற ஒரு சட்ட மூலமாக இது காணப்படுகின்றது என்ற அச்சம் பொதுமக்களுக்கு நிலவுகின்றது.
இந்த நிலையில் நாளைய தினம் வடகிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்தாலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகமாக நாங்கள் பூரண ஆதரவினை வழங்குகின்றோம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு
எங்களுடைய மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு இருக்கின்ற இந்த தருணத்திலே சிறிலங்கா அரசாங்கம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இந்த அரசாங்கம், அதிகாரிகளை கட்டுப்படுத்துவதற்காகவும் ஆக்கிரமிப்பிற்காகவும் பாரிய நிதிகளை செலவழித்துக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய இந்த சைவ தலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்ற வேலையை இந்த அரசு திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறான சூழ்ச்சியான மதவாதங்களை தூண்டுகின்ற இந்த அரசினுடைய சூழ்ச்சியை நாங்கள் கண்டிக்கிறோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமித்துக் கொண்டும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற இந்த புதிய சட்டமூலத்தையும் திணிப்பதற்கு அரசு முயல்கிறது.
அனைத்து பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் இந்த ஹர்தாலினை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
