தமிழர் தாயக நிலம் விடுவிப்பு - அரசாங்கத்தின் துரித திட்டம்
வடக்கு மற்றும் கிழக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள பாரம்பரிய காணிகளை மக்களுக்கு மீளக் கையளிக்கும் நடவடிக்கையை முறைப்படுத்த நிரந்தர அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகர், அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இயங்கும் இந்தக் காரியாலயத்தின் மூலம் குறித்த பிரச்சினைக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமென சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
அத்துடன், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், பாரம்பரிய காணி உரிமையாளர்களுக்கு அநீதி இழைக்காத வகையிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உரிய அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், 2009 ஆம் ஆண்டளவில், பாதுகாப்புப் படையினர் 23,850.72 ஏக்கர் நிலங்களைக் கொண்டிருந்தனர், இந்த ஆண்டின் தொடக்கத்தில், 20,755.52 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.
இதனோடு, 106 ஏக்கர் காணி 2023 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ளது
தற்பொழுது, மக்களிடம் விடுவிப்பதற்காக மேலும் 2989.80 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியதன் பின்னர் அந்தத் தொகையும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, மக்களுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் பாரம்பரிய காணிகளை மக்களுக்கு விடுவிப்பதற்காக முறையான அமைப்பை தயாரிக்கும் நோக்கில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
