சீனா ஆதரவு குறித்து மத்திய வங்கியின் ஆளுநரின் அறிவிப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன்களை மறுசீரமைக்கும் நாட்டின் முயற்சிக்கு, சீனா ஆதரவளிக்கும் என்றும், மீளச்செலுத்தும் கடப்பாடுகளுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உத்தியோகபூர்வ குழுவை நியமிப்பதா அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இறுதி உடன்பாட்டை எட்டுவதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இறுதி முடிவை எட்டுவார்கள்.
சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான இறுதி முடிவுகளை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் இறையாண்மைக் கடன் வழங்குனர்களுடனான ஆரம்பகட்டமாக 7.1 பில்லியன் டொலர்கள் கடன் மறுசீரமைக்கப்பட உள்ளது.” என தெரிவித்தார்.
அமெரிக்க திறைசேரி கோரிக்கை
முன்னதாக சீனா, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவவேண்டும் என்று அமெரிக்க திறைசேரி செயலாளரும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்த நிலையில், மத்திய வங்கி ஆளுநரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை ஆரம்பிப்பது குறித்து, ஜப்பான் மற்றும் இந்திய நிதி அமைச்சர்கள் அறிவிக்க உள்ளனர்.
வொஷிங்டனில் நாளைய தினம் நடைபெறும் வசந்தகால கூட்டத்துக்கு அப்பால் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும்
ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்ஸின் திறைசேரி பணிப்பாளர் இம்மானுவேல் மௌலின் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணையவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க இணையத்தின் ஊடாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
