புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ கோரிக்கை..! மறைமுக காய்நகர்த்தலில் அநுர அரசு
புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ இராச்சியத்திற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறைமுக காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வெளிப்படும் இரகசியம் அரசாங்கம் பாரிய பொய்களை சொல்லி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
அதைவிட பயங்கரமான ஒரு விடயம் உள்ளது. அதற்கு நான் சாட்சிக்காரன். முதன் முதலில் இன்றே அதை கூறுகிறேன்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சில குழுவினர்களுக்கு செய்து கொடுத்த சத்தியங்களை விரைவாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் இன்று அறங்கேற்றப்பட்டிருக்கும் நாடகத்தில் மக்களின் பார்வையை திசைதிருப்பப்பட்டு இவை நடைபெறுகிறது. நான் இதை எந்த ஊடகங்களிலும் சொல்லவில்லை.
புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுவதற்கு என்னையே அனுப்பினார். நான் அன்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இருந்தேன்.
புலம்பெயர் தமிழர்களின் நிதி
அப்போது பிரித்தானியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றேன். அங்கு அவர்களை சந்தித்தேன். அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட விரும்பவில்லை. இன்று அவர்கள் என் நண்பர்களாகி விட்டனர்.

லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் பிரதிநிதியை சந்தித்த சந்தர்ப்பத்தில், 'மாங்குளம், பரந்தன் மற்றும் காங்கேசன்துறை பகுதிகளில் முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதில் புலம்பெயர் தமிழர்களின் நிதியை முதலிடுவதால் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதில் தமிழ் மக்களே பயனடைவார்கள்.
அதுவே அவர்களுக்கு செய்யும் சேவையாகும்'என குறிப்பிட்டேன். லண்டன் பிரசாரக் கூட்டம் 'புலம்பெயர் தமிழர்கள் நிதி தமிழீழ இராச்சியத்திற்கு ஏதுவான காரியங்களுக்கு மட்டுமே செலவழிக்க முடியும்.
எங்களின் தனிப்பட்ட பணத்தில் சில தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறோம். இதை உங்கள் தலைவரிடம் சொல்லுகள் என்றனர்'.
தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் லண்டன் பிரசாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் தான் என்னிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நான் பகிடியாக,'ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்திற்கான செலவுகள் எந்த பணத்தில் செவழிக்கப்படுகிறது என்று கேட்ட போது',அது புலம்பெயர் தமிழர் நிதியத்தில் தான் செய்யப்படுகிறது என்றனர்.

அப்போ உங்களின் தமிழீழ எதிர்பார்ப்பு காரியங்கள் நிறைவேறுமா'? அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் தானே. யாரு என்ன சொன்னாலும், மறைமுக செயற்பாடுகள் இன்று தென்படுகிறது.
அது கல்வி சீர்திருத்தம் மூலம் வரலாம் அல்லது வேறுவடிலான சீர்திருத்தங்களில் கூட தென்படலாம்.கட்டாயம் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள்.
அதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.அதுவும் இதில் ஒரு பகுதியாகும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே,அதிகாரம் கிடைத்து விட்டது.
அதனோடு புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல பெயர்களில்,சட்டத்திட்டங்களில் நிறைவேற்றப்படுகிறது என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |