மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்
மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி ஹிஸ்புலா பாலர் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம். சுபயான் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்க சென்ற வயோதிப பெண் ஒருவர் வாக்களிப்பதற்கு உதவி கோரியுள்ளார்.
வேறு சின்னத்துக்கு புள்ளடி
இந்த நிலையில் அங்கு கடமையாற்றிவரும் உத்தியோகத்தர் ஒருவரை அவருக்கு உதவுமாறு வாக்குச் சாவடிக்கு பொறுப்பான தேர்தல் பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.
இதன்போது அந்த பெண் தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக குறித்த உத்தியோகத்தர் வேறு சின்னத்துக்கு புள்ளடியிட்டுக் கொடுத்துள்ளார்.
குறித்த பெண் வாக்குச் சீட்டை விரித்து பார்த்து தான் தெரிவித்த சின்னத்துக்கு புள்ளடியிட்டுள்ளார என பார்த்தபோது வேறு ஒரு சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம்
இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் உடனடியாக குறித்த உத்தியோகத்தரை கடமையில் இருந்து நீக்கி அவரை தேர்தல் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அத்துடன் குறித்த பெண் வாக்களிக்க ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |