காலாவதியான உணவுப் பொருட்கள் விவகாரம்: கொழும்பு உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்
நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தரவை மீறிய கொழும்பு 03 பகுதியில் இயங்கும் உணவகம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான பொருட்களை, விற்பனைக்கு வழங்கப்படும் மற்ற பொருட்களுடன் சேர்த்தோ அல்லது அருகிலோ வைத்திருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 03, அப்துல் கபூர் மாவத்தையில் அமைந்துள்ள சன் லைட் கார்டன் சீ ஃபுட் ரெஸ்டூரன்ட் (Sun Light Garden Sea Food Restaurant Pvt Ltd) நிறுவனத்திற்கே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு
கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, உணவக வளாகத்தில் 250 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய காலாவதியான கேன் பெப்பர் ஒயில் (Cane Pepper Oil) போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த போத்தலில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி காலாவதித் திகதியாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 1875/38ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 52ஆம் இலக்க கட்டளைக்கு அமைய, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என அடையாளம் காணப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் அல்லது அவற்றுக்கு அருகில் சேமித்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறியமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்த சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
காலாவதியான பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |