தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு!
இலங்கையில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன ( Upali abeyratne) நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
குடிசார் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஆணைக்குழுவின் நியமனங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை வரவேற்கும் அதேவேளை, ஆணைக்குழு தலைவரின் நியமனம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்படுபவர்கள் "பொது வாழ்வில் தமக்கெனச் சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட நபர்களாக" இருக்க வேண்டும் என்ற நிலையில் பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நபர்களை கருத்திற்கொள்ள முடியாது என குறிப்பிட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதன்படி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவை ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தது அவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை புறக்கணித்து சட்டத்தினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.
இந்த குற்றச்சாட்டுகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உள்ளடங்குகின்றன. அரசதலைவர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளானது நாட்டில் அதிகாரம் வேறாக்கத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
ஆணைக்குழு உறுப்பினர் "ஏதேனும் பொது அல்லது நீதித்துறைசார் பதவியை அல்லது வேறு ஏதேனும் இலாபமீட்டும் பதவியை வகிக்காத நபராக" இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதியரசர் அபேரத்ன தற்போது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவராகவும் OMP சட்டத்தின் பிரிவு 20 இன் படி சம்பளமும் பெறுகிறார். ஆகவே, நீதியரசர் அபேரத்னவின் நியமனமானது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக்கு முரணானதாகும் என குறித்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எனவே, இலங்கை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணையத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் காணப்படும் பாரபட்சம் மற்றும் சமநிலையின்மை போன்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதிஷானி பெரேரா, சுதந்திரமானது நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர். பாக்கியசோதி சரவணமுத்து, சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சகுந்தலா கதிர்காமர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லியோனல் குருகே,
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுலா கஜநாயக்க, வாழ்வுரிமை, மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிலிப் திஸ்ஸநாயக்க, விழுது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்ரேயி ராஜசிங்கம், இலங்கையின் உணவு முதல் தகவல் மற்றும் செயல் வலையமைப்பு தலைவர் திலக் காரியவசம், தேசிய தேசோதய சபை தேசிய அமைப்பாளர் நிஷாந்த ப்ரீதிராஜ், ஆகியோர் இந்த நியமனத்திற்கான தமது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.