பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள்: சபையில் கடுமையாக சாடிய வட்டகல
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே எதிர்க்கட்சியினர் தோற்றுவித்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய தரப்பினர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாதாளக் குழுக்களின் செயற்பாடு
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “பாதாளக் குழுக்களின் செயற்பாடு, போதைப்பொருள் வர்த்தகம் என்பது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு பிரச்சினையல்ல.

வெளிநாடுகளில் இருந்தவாறு பாதாளக் குழுக்கள் கொலை, கப்பம்கோரல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை ஒழுங்குப்படுத்துகின்றன.
அதேபோல் போதைப்பொருள் வர்த்தகமும் இடம்பெறுகின்றன. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதற்கு பலமான சட்டம் இயற்றப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்களால் பாதாளக்கு ழுக்களை கட்டுப்படுத்த முடியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை வெகுவிரைவில் சபாநாயகருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என கூறியுள்ளார்.
[XRDC9IS ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |