தேசபந்து தென்னகோனை கைது செய்ய அதிரடி உத்தரவு!
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் இன்று (28) விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
இது தொடர்பாக, முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று, கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று, பாதாள குழு உறுப்பினர் ஹரக் கட்டாவுக்கு நெருக்கமான ஒரு குழுவைக் கைது செய்ய மாத்தறையின் வெலிகம பகுதிக்குச் சென்றது.
அதன்போது, வெலிகமவில் உள்ள W 15 ஹோட்டலின் திசையிலிருந்து சிவில் உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
