உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ள பாகிஸ்தானின் புதிய பிரதமர்!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் நாளை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையான ஐவான்-இ-சதரில் ஷெபாஸ் ஷெரீப் நாளைய தினம் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்தல்
பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர்.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆட்சியமைப்பதில் இழுபறி
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லீக் நவாஸ் கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்தது.
அந்த கட்சியின் வேட்பாளர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இம்ரான் கானின் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் முன்னிறுத்தப்பட்டார்.
நாடாளுமன்ற வாக்குப்பதிவு
இந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று (3) கூடியதுடன், அதற்கான வாக்குப்பதிவும் இடம்பெற்றது.
இதன் போது, ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று, இரண்டாவது முறையாகவும் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவானார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் பிரதமராக 169 உறுப்பினர்கள் ஆதரவு போதும் என்ற நிலையில் ஷெபாஸ் 201 வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளார்.
இம்ரான் கான் ஆதரவு பெற்ற ஒமர் ஆயுப் கான் 92 வாக்குகள் பெற்றுள்ளார்.
உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பு
முன்னதாக, ஷெரீப் முன்மொழிந்த அயாஸ் சாதிக், நாடாளுமன்ற சபாநாயகராக கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் நாளை உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |