பாக்-சீனா அணு கூட்டணி: இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
சீனா (China) உதவியுடன் தனது அணு ஆயுதத்திறனை பாகிஸ்தான் (Pakistan) மேம்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அமெரிக்க (America) உளவு அமைப்பு இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கும் (India) சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகின்றது.
சீனா உதவி
குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமைகோரி வருகின்றது.
இந்தநிலையில், இந்தியாவுடனான போரை தொடர்ந்து தனது அணு ஆயுதத்திறனை சீனா உதவியுடன் பாகிஸ்தான் மேம்படுத்தி வருவதாக, அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்கள்
தங்களை முழுமையும் அழித்து விடக்கூடிய எதிரியாக இந்தியாவை பாகிஸ்தான் கருதுவதாகவும் அமெரிக்க பாதுகாப்புக்கான உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களையும் தொழில்நுட்பங்களையும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கி வருவதாகவும் ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வழியே இப்பொருட்கள் வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் மரபுசார்ந்த படைபலம் வலிமையாக இருப்பதால் அதை அணு ஆயுதங்கள் மூலமே எதிர்கொள்ள முடியும் என பாகிஸ்தான் கருதுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
