பால்மாவின் விலையேற்றம்! நிராகரித்தனர் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர்
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் நுகர்வோர் அதிகார சபையினால் அது நிராகரிக்கப்பட்டதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கப்பலுக்கான செலவு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவும் இதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் ஒரு கிலோகிராம் பால்மா 4.20 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே, அரசாங்கத்தின் நிர்ணய விலையின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 270 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
நாட்டில் நாளாந்தம் பாவனைக்காக 250 மெற்றிக் டன் பால்மா அவசியமாகின்றது.
இதனடிப்படையில் மாதாந்தம் பால்மா இறக்குமதியாளர்களுக்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.