மீண்டும் எதிர்காலத்திற்கு தயாராகவுள்ள பரந்தன் இரசாயன தொழிற்சாலை
கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (21-01-2026)பிற்பகல் நடைபெற்றது.
பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி ஆலைக்கு சுமார் 6390 மில்லியன் ரூபா செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வை கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
1956ம் ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை செயல்பட்ட தொழிற்சாலை, இப்போது கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் புனரமைப்பு பணி களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழிற்சாலையின் மறுமலர்ச்சி
இந்த தொழிற்சாலையின் மறுமலர்ச்சி, பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதில், இலங்கையின் உள்நாட்டு இரசாயன உற்பத்தி திறனை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறித்து நிற்கின்றது.

காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் உற்பத்தி அலகுகள் மறு கட்டமைப்பதற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட், வளர்ந்து வரும் உள்ளூர் சந்தை தேவையை பூர்த்தி செய்ய பாலி அலுமினியம் குளோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி வசதிகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் 40 வருடங்களின் பின்னர் பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீழ் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.
அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை
மேலும், எதிர்காலத்தில் இத்தொழிற்சாலை அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக இயங்கவுள்ளது. இவ்விடத்தில் நான் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன் எனவும் வலியுறுத்தினார்.

நீங்கள் எமது மக்களின் அன்றாட நுகர்வுத் தேவைக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
எத்தனையோ எம்மவர்கள் எமது மண்ணில் முதலீடு செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். வாருங்கள், கைகோருங்கள். வடக்கில் அமையவுள்ள மூன்று பாரிய முதலீட்டு வலயங்களில் ஒன்று இந்தப் பரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ளது.
இது எமது வடக்கு மாகாண இளையோருக்கு, குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்குப் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும், எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - எரிமலை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |