காகத்தின் பிடியில் சிறிலங்கா நாடாளுமன்றம்...!!
நாடாளுமன்றத்தின் பலம் காகத்திடம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அத்தோடு 21வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த காகத்தின் பிடியில் இருந்து நாடாளுமன்றத்தையும் நாட்டை காப்பாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,"நாடாளுமன்றத்தை காகத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியம்.
அதற்கு யார் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கி இந்த படுகுழியில் இருந்து வெளியில் வர வேண்டும்.
அப்படி வெளியில் வந்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். யார் சரி, யார் தவறு என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க சந்தர்ப்பத்தை வழங்குவோம்" எனக் குறிப்பிட்டார்.
பசிலை மறைமுகமாக சாடிய கம்மன்பில
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவையே உதய கம்மன்பில, காகம் என மறைமுகமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவானர்கள் என்பதுடன் அவரே அவர்களை வழிநடத்தி வருவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பசில் ராஜபக்சவை காகம் என்று போராட்டக்காரர்கள் குறிப்பிட்டு கோசமிட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
