யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை சேகரிக்கும் புலனாய்வாளர்கள் - பின்னணி
யாழ். குடாநாட்டில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வன்னி மாவட்டத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இருப்பிடம் மற்றும் சொத்து விபரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாட்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்ட நிலையில் மீண்டும் மக்களினுடைய போராட்டங்கள் அதிகரித்து எழுச்சி பெறலாம் என்ற எச்சரிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது வசிக்கும் வீடுகள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் அமைந்துள்ள இடங்களில் அதன் விபரங்களை சேகரித்து அடையாளம் இடும் பணிகளில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அரகலயப் போராட்டம்
இதுபோன்ற நிலை முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அரகலயப் போராட்டம் வன்முறையாக மாறியபோது ஆளும் தரப்பு அமைச்சர்களின் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் எரியூட்டப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் இது போன்ற சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக அந்தந்த மாவட்டங்களில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
யாழ் குடாநாட்டில்
இதற்கமைவாக யாழ் குடாநாட்டில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வன்னி மாவட்டத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இருப்பிடம் மற்றும் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அரச அலுவலகங்கள் கேந்திர நிலையங்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
