தடம்மாறிய ரணில் -அதிபர் கதிரையை தக்கவைக்க வலுவான நகர்வு
ஜனநாயக கோட்பாடுகளைக் கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது அதிலிருந்து விலகி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டுச்சேர்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று(06) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாட்டின் ஸ்திர தன்மையை ஏற்படுத்துவதற்காக தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாக அதிபர் குறிப்பிடும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அதிபர் கதிரையில் இருந்து தேர்தல்
மேலும் உரையாற்றிய அவர்,
“நாடு பொருளாதார ஸ்திர தன்மை எற்பட வேண்டுமானால் அது 2048 இல் நடைப்பெறும் இப்பொழுது அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு 74 வயது அப்போது அவருக்கு 99 வயது வரைக்கும் அதிபர் கதிரையில் இருந்து தேர்தலை நடத்த விரும்புகிறார்.
நாம் ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் போதே ஜனநாயகம் மீதான மதிப்பு தொடர்பாக அதிபர் அவர்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். ஆனால் இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டார்.
அதற்கு காரணம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததால் அவர்களுக்கு ஏற்ப நடந்துக்கொள்கிறார்.
பிரதேச சபை தேர்தல் நடைப்பெறாமையினால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை.
இதனால் மக்களுடைய பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியாமல் உள்ளது” என தெரிவித்திருந்தார்.
ஜனநாயகத்திற்க்கு எதிரானது
இதேவேளை. மாகாணசபையின் கீழ் நூற்றுக்கு 90 பாடசாலைகள், நூற்றுக்கு 80 வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் அதிபரின் பிரதிநிதியான ஆளுநரின் கீழே இயங்குவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
அத்தோடு, அதிபரின் இத்தகைய செயற்பாடு ஜனநாயகத்திற்கு எதிரான மக்கள் பிரதிநிதிகள் இன்றிய ஏகாதிபத்திய முறையே எனவும் நாடாளுமன்றத்தையும் அலட்சியம் படுத்தும் நிலைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, அதிபர் செயலணி அமைத்து அதன் மூலம் செயற்படுவதோடு, ஜே.ஆர். ஜயவர்தன காலத்தினை போல இப்போது ஆட்சி காலத்தை தேர்தல் இல்லாமல் அதிகரிக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், இன்று உலகம் மாறிவிட்டதாகவும், இவ்வாறான செயற்பாடு தொடர்ந்தால் மிக விரைவில் 2001, 2015 போல தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் எனவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்த தயவு செய்து தேர்தலை நடத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
