சர்வதேசத்தை நாடும் நாடாளுமன்ற துணைச் செயலாளர்!
அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற துணைச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் நான்கு சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம், பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம், நாடாளுமன்றங்களின் பொதுச் செயலாளர்களின் சர்வதேச மன்றம் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளிக்க அவர் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
நாடாளுமன்ற ஊழியர்களில் இரண்டாவது மிக மூத்த அதிகாரியான அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தால், முதற்கட்ட விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவருக்கு தனது வழக்கை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆனால் சபாநாயகர் அவ்வாறு செய்யாமல், அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்ததன் மூலம் நீதியின் கொள்கைகளை மீறியதாகவும் தொடர்புடைய முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
சமிந்த குலரத்னவின் சார்பாக நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு இந்த முறைப்பாடுகளை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச அமைப்புகளிடம் முறைப்பாடு அளிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் சட்டத்தரணிகள் குழு மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |