மன்னிப்பு கேட்பதால் சட்டத்திடம் இருந்து தப்பிக்க முடியாது - சிக்கலில் ஜெரோம் பெர்ணாண்டோ..!
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, மன்னிப்பு கேட்பதால் மாத்திரம், அவருக்கு சட்ட நடவடிக்கைகளில் இருக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளம் ஒன்றில் நேரலையாக கருத்து வெளியிட்டிருந்த ஜெரோம் பெர்னாண்டோ, "தாம் ஏனைய மதங்களை அவமதிக்கவில்லை எனவும் தமது கருத்துக்கள் ஏனைய மதத்தினரை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும்" கூறியிருந்த நிலையில், அவர் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் பெர்னாண்டோ கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
விசாரணை
இது தொடர்பில் இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“யாராவது குற்றம் செய்துவிட்டு மன்னிப்புக் கூறினால், விசாரணைகளை திரும்பப் பெற முடியாது. இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது.
இது குறிப்பிட்ட விடயத்திற்கு மாத்திரமல்ல எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறையாகும்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தற்போது அனைத்துப் முறைப்பாடுகளையும் விசாரித்து வருகின்றனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
நீதிமன்றம் அவருக்கு பயண தடை விதித்தது. எனவே அது நடைமுறைப்படுத்தப்படும் போது, அந்த நபர் நாடு திரும்பியதும், விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதே சாதாரண நடைமுறையாகும்.
அப்போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவாரா அல்லது வீட்டிற்கு அனுப்பப்படுவாரா என்பதை குற்றப்புலனாய்வு பிரிவு மட்டுமே முடிவு செய்ய முடியும்.
ஜெரேம் பெர்னாண்டோ நாடு திரும்பியவுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்வார்கள்." என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன் என ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்திருந்த போதிலும் தற்போது அவர் இலங்கை திரும்புவதற்கான வழிமுறைகள் குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)