மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்
மாகாண சபை தேர்தல்களை நிதி பற்றாக்குறை காரணமாக நடத்த முடியாது என கூறப்பட்ட கூற்றுக்களை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல்கள் குறித்து ஜே.வி.பி (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இன்றைய அமைச்சரவை ஊடக சந்திப்பில் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இத்தேர்தலை நடத்துவதற்கு முக்கிய தடையாக இருப்பது நிதி அல்ல, சட்ட விதிகளுடன் தொடர்புடைய சிக்கல்களே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையான சட்டக் கட்டமைப்பு
இந்த சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பணிகளில் நாடாளுமன்றக் குழுவொன்று தற்போது ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, தேவையான சட்டக் கட்டமைப்பு முழுமையடைந்தவுடன், மாகாண சபை தேர்தலை அரசாங்கத்தால் மிக விரைவில் நடத்த முடியும் என்றும் அவர் வலியுறுது்தியுள்ளார்.
"இந்த அரசாங்கம் ஏற்கனவே எட்டு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது. அரசியலமைப்பிற்கு இணங்க மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதே எங்களது எதிர்பார்ப்பு" என்றும் நலிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை. நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும், தேவைப்பட்டால் துணை மதிப்பீடு மூலம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |