மக்கள் பிரச்சினையைத் தீர்க்க குற்றப்புலனாய்வு பின்னடிப்பது ஏன்? முஜிபுர் ரஹ்மான் காட்டமான கேள்வி
எரிவாயு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக அறிந்து கொள்ளவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்றையதினம் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளித்துள்ளனர்.
அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்கையில்,
விசாரணைக்காக வாய் மொழி வாக்கு மூலம் சமர்ப்பிக்குமாறு கோரி லிட்ரோ நிறுவன அதிகாரிகளுக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளரால் பல முறை அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், லிட்ரோ நிறுவன அதிகாரிகள் எவரும் இதுவரை சமூகமளிக்கவே அல்லது பதிலளிக்கவே இல்லை என்றும் தெரிவித்ததாக கூறினார்.
ஏனைய விடயங்களுக்கு விரைந்து செயற்படும் குற்றப் புனாய்வுத் திணைக்களம், வீட்டில் மக்களின் நாளாந்த தேவைகளுடன் தொடர்புபடும், மக்களின் உயிருக்கே ஆபத்தை அறியாமலையே ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர்கள் விவகாரத்துடன் தொடர்புடைய விசாரணைகளில் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தும் விதமாக செயற்படாமை அரசியல் தலைவர்களின் பின்புலம் இதற்குள் இருப்பதை தெளிவாக புலனாகிறது.
நகர்புறங்களில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு மாற்றீடுகள் இன்றி நாளாந்த வீட்டு சமையல் மட்டுமன்றி பல தொழில்களுடன் தொடர்புடைய வியாபார நிலையங்களும் இதன் காரணமாக மூடு நிலை ஏற்ப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் நிதி அமைச்சுக்கு கீழால் வரும் ஒரு அரச நிறுவனம் என்றும் சுட்டிக்காட்டியதோடு, மக்களுக்கு போலியான தற்காலிக ஏற்பாடுகளுக்காக சலுகைப் பொதிகளை அறிமுகப்படுத்துவதை விட்டு விட்டு அத்தியவசிய எரிவாயு வெடிப்புச் சம்பங்களுக்குப் பின்னாலுள்ள ஊழலை வெளிப்படுத்த வேண்டும்.
நிதி அமைச்சுக்குப் பொறுப்பான பசில் ராஜபக்சவின் மேற்பார்வைக்கு கீழ் வரும் குறித்த லிட்ரோ நிறுவனம் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக செயற்படுவதும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பல முறை வாக்கு மூலங்களைப் பெறுவதற்கு அழைத்தும் பதிலளிக்காமை பிரபல அரசியல் சக்தி ஒன்றின் நேரடி தலையீடு இதில் உள்ளது என்பதை அப்பட்டமாக காட்டுகின்றது.
வெளிப்படையான விசாரணைக்கு நிதி அமைச்சின் மேற்பார்வையிலுள்ள ஓர் அரச நிறுவனம், அதன் அதிகாரிகள் அதிலும் குறிப்பாக இன்று வரை பல உயிர்களை பறிகொடுத்து அடுப்பங்கரைகளில் அச்சத்துடன் வாழும் ஒரு அசாதாரண சூழ் நிலை நாடெங்கிலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலும் கூட மக்களுக்கு பாதுகாப்பான நுகர்வை ஏற்ப்படுத்த முடியாத ஏழு மூளைகளை கொண்ட நிதி அமைச்சர் சார் நிறுவனத்தின் நடவடிக்கைகள் கிட்டிய காலத்தில் இதற்கு தீர்வை வழங்காது என்பதை வெளிக்காட்கின்றது.
ஆனால் மக்களாகவே இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி வரும்.
அண்மையில் அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பிற்கு எரிவாயு கலவையும் காரணமே என்று கூறியிருந்தும் கூட குற்றப்புலணாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு பதிலளிக்காமை பாரிய சந்தேகங்களை மேலும் மேலும் தோற்றுவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.