அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு -நாளாந்தம் முககவசங்களை கொள்வனவு செய்ய ஏழைக்குடும்பம் படும்பாடு
கடந்த இரண்டு வருடங்களில் முககவசங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மக்கள் 18 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
இதன்படி, முககவசங்களை கொள்வனவு செய்வதற்கு நாளாந்தம் ரூபா 25 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இவ்வேளையில், தொற்றுநோயிலிருந்து தப்பிக்க முககவசங்களை நாளாந்தம் கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதால், முககவசங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது மிகவும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு அல்லது மூன்று பாடசாலை பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் தந்தை ஒருவரே வேலை செய்தாலும், நான்கு முககவசங்கள் வாங்குவதற்கு காலையில் 60 ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளது.
முககவசங்கள் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதால் விலைகள் மாறுகின்றன என்றும் அவர் கூறினார். பேருந்துக் கட்டணம், உணவு, பானங்களின் விலை உயர்ந்து வரும் இக்காலத்தில் ஏழைக் குடும்பம் தினமும் புதிய முகமூடி வாங்குவது இயலாத காரியம் என்றும், ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்றும் அவர் கூறினார்.
