யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலங்கள்: உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதிகளில் இராணுவத்தினர் வெளியேறிய பின் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியானது 33 வருடங்களுக்கும் மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதமளவில் இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறினார்கள்.
எனினும் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக அப்பகுதி கையளிக்கப்படாததால் மக்கள் மீள் குடியேற முடியாத நிலையே காணப்பட்டது.
எனவே அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்மையால் திருட்டு சம்பவங்களுக்கும் இடம்பெற்று வந்துள்ளது.
இராணுவ கட்டுப்பாட்டுக்குள்
இது தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் வந்த வண்ணம் இருந்துள்ளது .
காணி உரிமையாளர்கள் தம்மை மீள் குடியேற தற்போது அனுமதிக்கா விடினும், எங்கள் காணிகளை எல்லைப்படுத்தி காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என கடிதம் மூலம் தெல்லிப்பளை செயலரிடம் கோரப்பட்டதன் பின்னர் வேலி அடைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை எல்லைப்படுத்தி வேலிகளை அடைத்து வருகின்றனர்.
மேலும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஞான வைரவர் ஆலய புனரமைப்பு பணிகளையும் மக்கள் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இராணுவத்தினர் வெளியேறி 3 மாதங்களாகியும் எங்களது காணிகளிலில் குடியேற முடியவில்லை என குடியேற அனுமதி தருமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.