வடக்கில் வாழும் தமிழர்கள் தொடர்பில் சிங்களே அமைப்பு கரிசனை
சிறிலங்காவின் தென்பகுதி மக்களுக்கு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படுவது போன்று, வடக்கு மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் (Dan Priyasad) தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மீண்டும், இனவாத, மதவாத பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சிங்களே தேசிய அமைப்பின் டேன் பிரியசாத் இன்றைய தினம் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணிக்கு தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குவதற்காக சென்றிருந்ததோடு, பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“வடக்கில் வாழும் தமிழ் அன்னையருக்கு அவர்களின் பிள்ளைகளை நினைவுகூரும் உரிமையை அவர்களுக்கு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
சிறிலங்காவின் யுத்த வெற்றி தினத்தின் போது தெற்கில் அன்னையர் அவர்களின் பிள்ளைகளை நினைவுகூருகின்றார்கள். தெற்கில் உள்ள அன்னையர்கள் மலர் அஞ்சலி செலுத்தி, விளக்கு ஏற்றி ஆறுதல் அடைகின்றனர். எனினும் வடக்கில் அந்த அன்னையருக்கும் இந்த வாய்ப்பில்லை.
ஆகவே அந்த அன்னையருக்கும், மக்களுக்கும் அவர்களின் உறவுகளை நினைவு கூறுவதற்கான ஒரு தினத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தீவிரவாதிகள் தொடர்பில் பேசுகின்றார்கள். எனினும் அவர்களை தீவிரவாதத்திற்கு அழைத்துச் சென்றது யார் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஆகவே அந்த மக்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 10 மணி நேரம் முன்
