நாமலின் திருமணத்தின் மின்சார கட்டணம்! மனு விசாரணைக்கு திகதி அறிவித்த உயர் நீதிமன்றம்
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
விஜித்த குமார என்ற சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டியவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,682,246.57 ரூபா மின்சாரக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தான் 7,390 ரூபா மாதாந்த மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காகத் தனது வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபா கட்டண நிலுவையை வைத்துள்ள வீரகெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்காமல் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாமல் ராஜபக்சவின் திருமண மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிருடன் இருந்தபோது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |