கொழும்பு அதிகாரிகளால் அத்துமீறி அளவீடு! வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்தக் கோரி மகஜர் கையளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை கடற்படைதளத்திற்கென நிரந்தரமாக காணியை சுவீகரிப்பு செய்ய அளவீடு செய்ய முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்றைய தினம் (14) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இந்த மகஜரினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (காணி) ஆகியோரிடம் கையளித்தனர்.
கொழும்பு அதிகாரிகளால் அளவீடு
இன்று காலை முதல் வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது எதிர்ப்பை மீறி கடற்படை வாகனம் ஒன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச அதிகாரிகளை அழைத்துச் சென்று கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் நில அளவீடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு மக்கள் மகஜர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

